கற்பூரம் அணைந்துவிட்டால் அபசகுணமா? சாஸ்திரம் சொல்வது என்ன?

கற்பூரம் அணைந்துவிட்டால் அபசகுணமா? சாஸ்திரம் சொல்வது என்ன?

வீட்டிலோ, கோயிலிலோ தீபாராதனை செய்யும் போது கற்பூரம் திடீரென அணைந்துவிட்டால், “இது அபசகுணமா?” என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. சிலர் இதனால் மனம் கலங்கிப் போகிறார்கள்; சிலர் தேங்காய் அழுகினாலும் அதேபோல் அபசகுணம் எனக் கருதுகிறார்கள். ஆனால் சாஸ்திரப்படி உண்மையில் அதற்கு எந்த தீய அர்த்தமும் இல்லை.

கற்பூரத்தின் ஆன்மீக அர்த்தம்

கற்பூரம் எரிவது இந்து வழிபாடுகளில் முக்கியமான ஆன்மீகச் சின்னமாகும். அது தன்னை முழுவதுமாக எரித்து சாம்பலாக மாறாமல் காற்றில் கலக்கிறது. இதன் மூலம், மனிதன் தன் அகங்காரம் மற்றும் மாயையை அழித்து இறைவனுடன் ஒன்றுபட வேண்டும் என்பதைக் கற்பூரம் உணர்த்துகிறது.

கற்பூரத்தின் ஒளி நம் உள்ளத்தில் இருக்கும் ஞானத்தை, உண்மையை பிரதிபலிக்கிறது. இறைவனின் திருமேனியைப் போல், நம் அகத்திலுள்ள இருளையும் அறியாமையையும் நீக்க வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது.

கற்பூரத்தின் பவித்ர தன்மை

வெண்மையான கற்பூரம் தூய ஆன்மாவைக் குறிக்கிறது. தூய மனம், தூய எண்ணத்துடன் இறைவனை சரணடைய வேண்டும் என்ற ஆன்மிகப் பொருளை இது தருகிறது. கற்பூரம் எரியும் போது வரும் நறுமணம், சுற்றுப்புறக் காற்றை சுத்தமாக்கி, நுண்ணுயிரிகளை (bacteria) அழிக்கிறது.

அதேபோல் அதன் வாசனை மனஅழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைத்து அமைதியையும் தருகிறது. கொசுக்கள் போன்ற பூச்சிகளையும் விரட்டுகிறது.

பச்சை கற்பூரத்தின் சிறப்பு

பொதுவாக பச்சை கற்பூரம் (Edible Camphor) தெய்வ சன்னதிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது நறுமணத்திலும், நேர்மறை ஆற்றலிலும் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஆரத்தி எடுக்க வேண்டிய முறை

கற்பூரம் எப்போதும் பித்தளை அல்லது வெள்ளி தட்டில் ஏற்றி தீபாராதனை செய்ய வேண்டும். மண் தட்டிலும் ஏற்றலாம். ஆனால் எவரும் இரும்புத் தட்டில் ஏற்றக் கூடாது.

பொதுவாக காலை, மாலை நேரங்களில் கற்பூர ஆரத்தி எடுப்பது நல்லது. குறிப்பாக சூரியன் மறையும் வேளையில் கற்பூரம் ஏற்றுவது வீட்டில் அமைதியையும் செழிப்பையும் கூட்டும் என்று நம்பப்படுகிறது.

சிலர் கற்பூரத்துடன் கிராம்பு சேர்த்து எரிப்பதன் மூலம் திருஷ்டி நீங்கும் என்று நம்புகிறார்கள். வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால், ஒரு மூலையில் கற்பூரத் துண்டுகளை வைப்பதும் நல்லது என பரம்பரையாக சொல்லப்படுகிறது.

அணைந்துவிட்டால் என்ன செய்வது?

காற்றினால் கற்பூரம் அணைந்துவிட்டால் அதில் எந்த அபசகுணமும் இல்லை. அது ஒரு இயல்பான நிகழ்வே. அப்படி நடந்தால் மீண்டும் அதே கற்பூரத்தை ஏற்ற வேண்டாம்; புதிய கற்பூரத் துண்டுகளை வைத்து தீபாராதனை செய்யலாம்.

இது ஒரு தீய சிக்னல் அல்ல, மாறாக நம் மனதில் ஏற்பட்ட பயத்தைப் போக்கி, நம்பிக்கையுடன் இறைவனை வணங்க வேண்டும் என்பதையே சாஸ்திரம் சொல்லுகிறது.

0 Comments

மறுமொழி இடவும்

Your email address will not be published. Required fields are marked *